கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்: மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க விருக்கும் மாநிலங்களில், கரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரம் கடிதம் எழுதியது. இந்நிலையில், தற்போது கரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படத்தைநீக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி, அரசு விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதானப்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு மோடியின் படம் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று திரிணமூல் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதியது. அதில், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், அதன்படி, கரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படத்தை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் வழங்கப்படும் கரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படத்தை நீக்கும் முயற்சியில் சுகாதாரத் துறை இறங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே