இராமநாதபுரம் : “மஞ்சள் கொடுத்தால் தங்கம் கிடைக்கும்” – போலீஸாரிடம் சிக்கிய ஆசாமிகள்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வேதாளை அருகே நேற்று இரவு மாருதி ஆம்னி வேனில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் கடத்திச் செல்வதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைபேசி எண் 9489919722-க்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படி ராமேஸ்வரம் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் அய்யப்பராஜா தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் பிரபு துரை, மாணிக்கம், ராஜ்குமார், ராம்குமார், முனீஸ்வரன், ஜேம்ஸ் கிலிட்டஸ் மற்றும் ரெத்தினம் ஆகியோர் வேதாளை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள்

அப்போது, ராமேஸ்வரத்தை நோக்கி வந்த மாருதி ஆம்னி வேனை நிறுத்திய போலீஸார் அந்த வேனை சோதனை செய்தனர்.

சோதனையின்போது தலா சுமார் 40 கிலோ எடை கொண்ட 15 சாக்கு மூட்டைகளில் 600 கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தில் இருந்த மண்டபம் வேதாளையை சேர்ந்த அப்துல் முபாரக் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

`இலங்கையில் உள்ள ஹக்கீம் என்பவர் அப்துல் முபாரக்கை தொடர்புகொண்டு, `இலங்கையில் கொரோனா தொற்று வைரஸ் நோய் அதிகளவில் இருக்கிறது.

இங்கு மக்களுக்கு மஞ்சள் அதிகளவில் தேவைப்படுவதால், மஞ்சள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கைது செய்யப்பட்ட பாபு உசேன்
கைது செய்யப்பட்ட பாபு உசேன்

இதனால், இலங்கைக்கு மஞ்சள் அதிகளவில் அனுப்பி வைத்தால் அதற்கு ஈடாக ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை தருகிறேன்’ எனக் கூறியிருந்த நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகளை எடுத்து வந்தது விசாரணையின் மூலம் தெரியவந்தது.

மேலும், மஞ்சள் மூட்டைகளை பாம்பன் குந்துகால் பகுதியைச் சேர்ந்த பாபு உசேன் உதவியுடன் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் என்பவருக்குச் சொந்தமான படகு மூலம் பாம்பன் குந்துகால் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மஞ்சள் மூட்டைகளை ஏற்றி வந்த வேன் மற்றும் மஞ்சள் மூட்டைகளை போலீஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட அப்துல் முபாரக்
கைது செய்யப்பட்ட அப்துல் முபாரக்

அத்துடன், கடத்தல் ஆசாமிகள் அப்துல் முபாரக், பாபு உசேன் மற்றும் படகு உரிமையாளர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீது மண்டபம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மஞ்சள் கடத்தலை மடக்கி பிடித்த ராமேஸ்வரம் தனிப்பிரிவு காவலர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலா ரூ.3,000-ம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே