முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து..!!

தமிழகத்தின் 12ஆவது முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து திமுகவின் 33 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். விழாவில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டின் 12-ஆவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துகள். Criticize (விமர்சனம் செய்தல்) , Constructive ( ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுதல்), Creative ( புதிய திட்டங்களை உருவாக்கி அரசுக்கு அளித்தல்) என்று வகுத்துக் கொண்ட இலக்கணங்களுக்கு ஏற்ப பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலன் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே