ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் – ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடியின் பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்போ கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக எஃப்.டி.ஏ. எனப்படும் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட இருந்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் வர்த்தக உறவு இன்னும் வலுவடையும்.
பிரதமரான பிறகு, மோடி முதன்முதலில் 2015 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவ துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நயான், 2016 இல் இந்தியாவுக்கு வந்தார்.மீண்டும் ஜனவரி 2017 இந்தியாவுக்கு வந்த அவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
வர்த்தக உறவுகளை தவிர்த்து இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ராணுவ ரீதியில் நெருக்கமான உறவை கொண்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில், ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே ஐக்கிய அரபு அமீரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டிற்கு, இந்திய ராணுவத் தளபதியின் வருகை புரிவது அதுவே முதன்முறையாகும்.
கடந்த ஜூலை மாதம், அப்போதைய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதௌரியா ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருந்தார். அமீரகத்திற்கு இந்தியா பல்வேறு முறை பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.