கருணாநிதி பிறந்தநாளையொட்டி 38,000 மரக்கன்றுகளை நடும் பணி தொடக்கம்..!!

கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த பிறந்தநாள் திமுகவினருக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

இன்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்தனர்.

அங்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். அது போல் முன்னதாக அண்ணா நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் 38 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மெரினாவில் மரக்கன்று நடுவதன் மூலம் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தலா 1000 மரங்கள் வீதம் வனத்துறையினர் நடுகின்றனர். இன்றைய தினம் 5 திட்டங்களை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா நிவாரணம் 2ஆவது தவணை ரூ 2000 வழங்கப்படுகிறது.

இன்று முதல் ரேஷன் கடைகளில் 13 பொருட்கள் வழங்கும் திட்டம், 38 ஆயிரம் மரங்கள் நடும் திட்டம், கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூ 4000 வழங்கும் திட்டம், முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே