சென்னையில் கோவிட் கேர் சென்டர் தொடங்க அனுமதி – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் தனியார் கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் 900 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகள் தவிர்த்து, சென்னையில் கல்லூரிகள், விடுதிகள் என 14 இடங்களில் 12600 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கபட்டுள்ளது என்றார். இந்த எண்ணிக்கையை 25ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால், மக்கள் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் சோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், அறிகுறிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் விரைவாக சரி செய்ய முடியும் என்றார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் தலா 2 இடங்கள் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்களும் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க முன் வரலாம் என்றும், அவ்வாறு வருபவர்களுக்கு மாநகராட்சி உரிய அனுமதி அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் தனியார் அமைப்புகளுக்கு கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்றும், ஆய்வு ரீதியிலும் தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதியாகியுள்ளதாகவும் கூறிய அவர், சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும், இன்னும் சில நாட்களுக்கு 4லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் சென்னைக்கு மட்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே