முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிண்டி கிங் நோய்த்தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 750 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு கரோனா மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:
”கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்காக பல்வேறு மருத்துவமனைகள் அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கரோனா மருத்துவமனை ரூபாய் 136.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இது 750 படுக்கை வசதிகளுடன் கூடிய அடித்தளம், தரைதளம், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அடித்தளத்தில் வரவேற்பறை, அதிநவீன சிகிச்சைப் பிரிவு, மருத்துவம் மற்றும் ரத்தச் சேகரிப்பு பிரிவுகளுடனும், தரைதளத்தில், சிடி ஸ்கேன், சோனோகிராம், எக்ஸ்ரே போன்ற கருவிகளுடனும், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளும், மூன்றாம் தளத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு யோகா பயிற்சி மேற்கொள்ள பிரத்யேகக் கூடம் மற்றும் காணொலிக் காட்சி மூலம் மருத்துவர்களிடம் கரோனா நோய் சிகிச்சை குறித்து விவரம் கேட்கும் வசதி, மற்றும் உறவினர்களுடன் பேச அதிநவீன வைஃபை வசதி என அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு இணையான அதிநவீன மருத்துவமனையாக நான்கு தளங்களுடன் முறையே மருத்துவ ஆக்சிஜனுடைய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்கு 60 படுக்கைகள் மற்றும் 40 சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள் மற்றும் 100 மருத்துவம் சாரா பணியாளர்கள் கரோனா தடுப்புப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இங்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக, சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வல்லுநர் குழுவில், அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையிலிருந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
எவ்விதக் காலதாமதமும் இல்லாமல், உயிரிழப்பு ஏற்படாவண்ணம் உடனடி சிகிச்சை அளிப்பதற்காக இந்த பிரத்யேகக் கரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும், அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 22,595. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 9,073 என மொத்தம் 31,668 படுக்கைகள் உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7,815. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 5,749 என மொத்தம் 13,564 படுக்கைகள் உள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவிட் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அரசின் சார்பாக 123 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 191 மருத்துவமனைகள் என மொத்தம் 314 கோவிட் மருத்துவமனைகளும், சென்னையைப் பொறுத்தவரை, அரசின் சார்பாக 12 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 76 மருத்துவமனைகள் என மொத்தம் 88 கோவிட் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவிட் சிறப்பு மையங்களின் எண்ணிக்கை அரசின் சார்பாக 516 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 2 மருத்துவமனைகள் என மொத்தம் 518 கோவிட் சிறப்பு மையங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அரசின் சார்பாக 45 கோவிட் சிறப்பு மையங்களும், தனியார் சார்பாக 2 கோவிட் சிறப்பு மையங்களும் என மொத்தம் 47 கோவிட் சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும், 75,000 படுக்கை வசதிகளுடன் கோவிட் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில், அரசின் சார்பாக 17,500 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும், அரசின் சார்பாக 49 பரிசோதனை நிலையங்கள், தனியார் சார்பாக 46 பரிசோதனை நிலையங்கள் என மொத்தம் 95 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இதில், நாளொன்றுக்கு 35 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களை தேவையான அளவிற்கு கொள்முதல் செய்கிறோம்.
ஆர்டிபிசிஆர் கிட்ஸ், மும்மடிப்பு முகக் கவசங்கள், என்.95 முகக் கவசங்கள், முழு உடை கவசங்கள் (கவச உடை), வென்டிலேட்டர்கள் போதிய அளவிற்கு இருக்கின்றன. சிறப்பு மருந்துகளுக்கான ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டுள்ளன.
கரோனோ வைரஸ் தொற்று உள்ளவர்களைச் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும், மருந்துகளும் அரசிடம் உள்ளன.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை ஊரடங்கின் காரணமாக படிப்படியாக தொற்றுநோய் குறைவதை நாம் காண்கிறோம். அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்திருக்கிறது”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.