மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான்..!!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுவதால், தொற்று எண்ணிக்கை உயரும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்‌ தொற்றின்‌ 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவர முழு வீச்சுடன்‌ நாடே போராடி வருகிறது. இதற்கு மத்தியில்‌ உருமாறிய கொரோனாவாக ஒமைக்‌ரான்‌ வைரசும்‌ களத்தில்‌ குதித்து இருக்கிறது.

இந்தியாவில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வெளிநாட்டு விமான பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதுவரை இந்தியாவில் 26 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிர்ச்சி தரும் சம்பவமாக மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா அலைகளின்போது இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை தாராவி பகுதியில் இன்று முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் டான்சானியாவில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். அவர் தற்போது செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நபர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 3 பேர் மும்பையையும், 4 பேர் பிம்ரி பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்த 7 பேரில் 4 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். ஒருவர் முதல் டோசை மட்டும் செலுத்தியுள்ளார். இன்னொருவர் எந்த தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை. இதை தவிர்த்து மூன்றரை வயது குழந்தைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த 7 பேரில் யாருக்கும் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. 3 பேருக்கு லேசான அறிகுறி இருந்துள்ளது. ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மகாராஷ்டிராவில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே