தமிழகத்தில் பொது ஊரடங்குக்கு அவசியமில்லை – தலைமைச் செயலாளர் சண்முகம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கோவையில் கொரோனா பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 500 ஆக இருந்த தொற்று, பல்வேறு நடவடிக்கைகளால் நாள் ஒன்றுக்கு 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது எனவும், கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 38 ஆக குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் காரமடை, பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து இருந்து வருகிறது எனவும், மாநிலத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு விகிதம் 3 சதவீதமாக இருந்தாலும், சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது எனவும் அவர் கூறினார். 

கொரோனா தீவிரம் இன்னும் குறையவில்லை எனவும், அதேசமயம் பொது ஊரடங்கிற்கு அவசியமில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் கொரோனா இறப்பு விகிதம் 1.27 சதவீதமாக உள்ளது எனவும், கோவை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் முறையாக முகக்கவசம் அணிந்தால் 40 சதவீதம் வரை தொற்றை தடுக்க முடியும் எனவும், கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்பதை சொல்ல முடியாது எனவும் கூறிய அவர், கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளை தாக்கும் மிஸ்சி நோய் பாதிப்பு குறைந்தளவே உள்ளது எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே