தமிழக நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை அக்.1 முதல், ரூ.1.30 முதல் ரூ.2.80 வரை உயர்கிறது.
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.13.70-க்கு வழங்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் இருப்பு அடிப்படையிலேயே தகுதியான குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் அக்.1 முதல் மண்ணெண்ணெயின் விலை உயர்த்தப்பட உள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
எண்ணெய் நிறுவனங்கள் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை உயர்த்த உத்தரவிட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசு கடந்த செப்.4-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் சென்னை நகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கும் மண்ணெண்ணெய் சில்லறை விற்பனை விலையை வரும் அக். 1-ம் தேதி முதல் லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.15 முதல் அதிகபட்சம் ரூ.16.50 வரை உயர்த்தி நிர்ணயிக்க, அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்ணெண்ணெய் மொத்த வணிகர்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்பட்ட கொள்முதல் பட்டியல் அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை விலை திருத்தி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் அவர்களுக்கு இணைக்கப்பட்ட நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் நுகர்வோருக்கான மண்ணெண்ணெய் சில்லறை விலை திருத்தி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மண்ணெண்ணெய் மொத்த வணிகர்களுக்கான விளிம்புத்தொகை, போக்குவரத்துக் கட்டண ஆதாய விளிம்புத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளதால் அதற்கேற்ப மண்ணெண்ணெய் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.