பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஜூடோ பயிற்சியாளர் கைது..!!

தற்காப்புக் கலை பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஜூடோ மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பள்ளி மாணவிகள் புகார் அளித்து வருவதைத் தொடர்ந்து மற்றொரு பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மற்றுமொரு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் பயிற்சிக்காக வந்த தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக விளையாட்டு வீராங்கனை அளித்த புகாரில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது ஜூடோ பயிற்சிக்காக வந்த தனக்குப் பாலியல் தொல்லை தந்ததாக ஜூடோ மாஸ்டர் ஒருவர் மீது 26 வயது இளம்பெண் புகார் அளித்தார். 

வழக்கை விசாரித்த போலீஸார், புகார் உண்மை என அறிந்து ஜூடோ மாஸ்டரை இன்று கைது செய்தனர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மே 29ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அவரது புகாரில், “நான் 2014ஆம் ஆண்டு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி பெறுவதற்காக அண்ணா நகர் எச்.பிளாக், 12-வது மெயின் ரோடு என்ற முகவரியில் HI-Impact Martial Art School என்ற தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் (41) என்பவரிடம் பயிற்சிக்குச் சென்றேன்.

பயிற்சிப் பள்ளியின் சார்பில் ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்றோம், சென்றுவிட்டுத் திரும்பி வரும் வழியில் என்னுடன் காரில் உடன் பயணித்த பயிற்சியாளர் கெபிராஜ் என்னுடைய உடல் பகுதிகளைத் தொட்டும், என்னைப் பலவந்தப்படுத்தியும் பாலியல் தொந்தரவு செய்ததால் அதிர்ச்சியடைந்தேன்.

அவரது செயலைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்ததால் கெபிராஜ் என்னை மிரட்டினார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் என்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். என்னிடம் இவ்வாறு நடந்து, கொலை மிரட்டல் விடுத்த தற்காப்புக் கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். புகார் கொடுத்த பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீஸார் ஆதாரங்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது ஐபிசி பிரிவு 354- (வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல்), 509-(சொல் அல்லது செயல் மூலம் பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கில் ஈடுபடுதல்), 376 (பாலியல் பலாத்காராம்) 511 (பாலியல் பலாத்கார குற்றம் செய்ய முயற்சி), 506(2) (ஆயுதத்தை வைத்துக் கொலை செய்வதாக கொலை மிரட்டல்) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இளம்பெண் புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக ஆஜராகும்படி அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் பயிற்சியாளர் கெபிராஜுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடினர், அவர் கும்மிடிப்பூண்டியில் பதுங்கி இருப்பது தெரியவந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.

அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கெபிராஜைக் கைது செய்த போலீஸார், அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் அவர் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கெபிராஜின் நண்பர்கள், 3 பயிற்சியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே