தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET – UG தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.

நடப்பு 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் 17,64,571 பேர் தேர்வை எழுதியதில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு ரிசல்ட்

ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 1,22,995 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் ராஜஸ்தான் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் உத்தரபிரதேசம் ,மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரைதிருதேவ் விநாயகா என்ற மாணவன் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் 30 வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று 43 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

அகில இந்திய அளவில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% என்று இருந்த தேர்ச்சி விகிதம் 2022-ல் 51.30% ஆக குறைந்துள்ளது.

தமிழக மருத்துவக்கல்லூரிகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள 91,927 MBBS இடங்கள், 27,698 BDS இடங்கள், 52,720 ஆயுஷ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 70 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 10,425 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 757 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட பின், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 4,293 இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் நேரடியாக கலந்தாய்வை நடத்த உள்ளது.

கடும் போட்டி

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1,22,995 பேர் நீட் தேர்வில் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர கடும் போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவக் கல்வி இயக்குநரகம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட உடன், முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெறும்.

அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

இந்நிலையில் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்ளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது . அரசுப்பள்ளி மாணவர்களில் நீட் தேர்வுக்கு 17,972 பேர் விண்ண ப்பித்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 4,447 அதாவது 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்த பட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

100 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் தேர்வு எழுதிய 8,061 அரசுப்பள்ளி மாணவர்களில் 1,957 பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே