ஹரியாணாவில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்..!!

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஹரியாணாவில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு கட்டண வசூலை தடுத்தனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் கடந்த 30 நாட்களாக விவசாயிகள் தொடர் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அரசு சார்பில் விவசாய சங்கங்களுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக கடந்த வாரம் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தின.

அப்போது, ஹரியாணாவில் உள்ள சுங்கச்சாவடிகளை டிசம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹரியாணாவில் உள்ள பெரும்பாலான முக்கிய சுங்கச்சாவடிகளை நேற்று அதிகாலை முதலே விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவிந்திருப்பதால், அவர்களை போலீஸாரால் விரட்ட முடியவில்லை.

சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பஸ்தாரா நெடுஞ்சாலை, கர்னல் – ஜிந்த் நெடுஞ்சாலை, குயான் நெடுஞ்சாலை, டப்வாலி நெடுஞ்சாலை, ரோத்தக் – பானிபட் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த பாரதிய கிசான் யூனியனின் ஜக்ஜித் சிங் கூறும்போது, ‘வேளாண் சட்டங்களை நீக்குவதற்கு அரசு முன்வராத வரை, எங்கள் போராட்டம் தீவிரமடைந்து கொண்டே இருக்கும். இதனை உணர்த்துவதற்காகவே சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கு பிறகும், அரசு தனது விடாப்பிடியான போக்கை கைவிடாவிட்டால் மற்ற மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளையும் விவசாயிகள் முற்றுகையிடுவார்கள்’ என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே