ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும் – டெல்லி அரசு தகவல்..!!

480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தராவிடில் டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துவிடும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு நேர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், டெல்லி மருத்துவமனைகளுக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் டெல்லி சீரழிந்துவிடும் என மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது. 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிய நோயாளிகள் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது என்றும்; டெல்லியிலுள்ள 120 மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது எனவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்றும்; 120 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சென்று சேருவதை உறுதிப்படுத்த 10 அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் டெல்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே