டெல்லி : தகனம் செய்வதற்காக வரிசையாக வைக்கப்பட்டுள்ள உடல்கள்..!!

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையை சமாளிக்க நாய்களைத் தகனம் செய்யும் இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய டெல்லி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது.

டெல்லியில் தினசரி 24,149 பேருக்கு வைர்ஸ பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் 300ஐ தாண்டியுள்ளது.

 Corona deaths continue to rise, Dog crematorium site used for humans in Delhi

இதன் காரணமாக உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலைமையைச் சமாளிக்க தெற்கு டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் -29 இல் தற்காலிகமாக உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது நாய்களை தகனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இடமாகும்.

செக்டர் -29 இல் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் இன்னும் சடலங்கள் எரிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.

மாநிலத்தில் உயிரிழப்புகள், 15-20% வரை அதிகரித்துள்ளதால் நிலைமையை சமாளிக்க இந்த இடம் உதவும் என டெல்லி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் கடந்த வாரம் தினசரி 650 பேரின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த எண்ணிக்கை தற்போது 882ஆக உயர்ந்துள்ளன. இது கொரோனா இல்லாத காலத்துடன் ஒப்பிடுகையில் பல மடங்க அதிகமாகும்.

வரும் காலத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால், குழப்பத்தைத் தவிர்க்கத் தினசரி 1,000 உடல்கள் வரை தகனம் செய்ய தயாராக இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யமுனை நதிக்கரையில் உடல்களை தகனம் செய்ய ஏதுவான இடங்களையும் அடையாளம் கண்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே