தடுப்பூசிகளை செலுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்து – WHO

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா இரண்டாம் பரவல் ஆரம்பித்தது. மே மாதத்தில் பரவல் உச்சம் பெற்றது. கொரோனாவின் சீற்றத்தை தாங்க முடியாமல் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டெல்லி மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

தொடர்ந்து மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தின. முழு ஊரடங்கின் பயனால் தொற்றின் சங்கிலித் தொடர் உடைந்தது. இதனால் சரசரவென கொரோனா இரண்டாம் பரவல் குறைய தொடங்கியது.

தலைநகர் டெல்லியில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் எந்த வேகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதோ, அதே வேகத்தில் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பதிவான கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழே சென்றுள்ளது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு சென்றுள்ள நிலையில், இங்கேயும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்திலிருந்தே முழு ஊரடங்கு தற்காலிக தீர்வு மட்டுமே; ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட வேண்டும்; அதுவே நிரந்தர தீர்வு என உலக சுகாதார அமைப்பும் மருத்துவ வல்லுநர்களும் அறிவுறுத்தியிருந்தார்கள். ஆனால் இந்தியாவில் முழு ஊரடங்கின்போது தடுப்பூசி போடும் பணி மந்தமாகவே இருந்தது. மாறாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டியும் பற்றாக்குறையே நிலவியது. ஆனால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதை அபாயகரமானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து கொரோனா பரவலைக் கண்காணித்து வருகிறோம். இன்னும் பல நாடுகள் ஆபத்தில்தான் உள்ளன. கொரோனா தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தாமல் தளர்வுகள் அளிப்பது ஆபத்தில் தான் முடியும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள்தொகையில் 10% மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 30% ஆக இருக்க வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே