அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் கண்டனம்..!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு தமிழக அரசு ஏற்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் எம்.டெக் படிப்பில் ஏன் அமல்படுத்தியது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பத்திருந்த சித்ரா உள்ளிட்ட மாணவிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தனர்

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும்,படிப்பு ரத்து செய்யப்படக்கூடாது என்பதாலும் இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..

இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,

மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழகத்தில், தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்ற படுவதாக முறையிட்டார்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கும் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அந்த சான்றிதழ் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைகழகம் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற நீதிமன்றம் அனுமதித்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு ஏன் அமல்படுத்தப்பட்டது என கேள்வி எழுப்பினார்

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அப்படியே பின்பற்றாமல், தங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதி, அண்ணா பல்கலைகழகமும், மத்திய அரசும் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே