தமிழகத்தில் நாளை (ஜனவரி 2 ம் தேதி) முதல் இலவச கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ‘முக கவசம் உயிர் கவசம்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

அத்துடன், முககவசம் அணிவதன் முக்கியத்துவம் என்ன என்பது அடங்கிய விழிப்புணர்வு கையேட்டையும் அவர் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘ சுகாதாரத்துறைக்கு 2020 மறக்கமுடியாத ஆண்டு எனலாம். உயிர் பயத்தை காட்டிய கொரோனோ பெருந்தொற்றுக்கு எதிராக நாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம்.

நாட்டிலேயே கொரோனோ தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது.

புதியதாக பிறந்துள்ள 2021 ஆண்டு சிறப்பான, பாதுகாப்பானஆண்டாக அமையும் என்று நம்புவோம்.

தமிழகத்தில் இலவச கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் மற்றும் 6 லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் மூலம் கொரோனோ தடுப்பூசி போடுவதன் ஒத்திகை நாளை (ஜனவரி 2) முதல் தொடங்கவுள்ளது.

கொரோனோ தடுப்பூசி கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு செலுத்தப்படும் என்றார்.

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று குறித்த கேள்விக்கு, லண்டனிலிருந்து வந்த 1554 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலர் தங்கள் முகவரியை மாற்றி கொடுத்ததால் கண்டுபிடிப்பது சவாலாக மாறியுள்ளது’ என்றும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே