தமிழகத்தில் கரோனா ஏறுமுகத்தில் உள்ளது: அலட்சியம் கூடாது; ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

கடந்த 10 தினங்களுக்கு முன் தமிழகத்தில் 100-ல் ஒருவருக்கு என்று இருந்த கரோனா, தற்போது 100-ல் இருவருக்கு என்ற அளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று (மார்ச் 22) மட்டும் 1,385 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 23) பேசிய ராதாகிருஷ்ணன், “கரோனா தொற்றில் தமிழக மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. கரோனா தொற்று பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.

தற்போது 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால், இருவருக்குத்தான் தொற்று வருகிறது. என்றாலும், 10 நாட்களுக்கு முன்பு 100-ல் ஒருவருக்கு என்ற அளவில்தான் இருந்தது. நிலையான வழிமுறைகளை பின்பற்றாதது ஒரு காரணம்.

பண்டிகை காலங்களில் நோய் பரவாததால், கரோனா தொற்று இல்லை என மக்கள் நினைக்கின்றனர். பிப்ரவரி மாதம் வரை குறைந்துதான் இருந்தது.

ஆனால், இப்போது இந்திய அளவில் 10 ஆயிரம் என்றிருந்த தினசரி கரோனா தொற்று, 40 ஆயிரத்தையும் இப்போது தாண்டிவிட்டது. பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே