தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… இரண்டாவது அலை வீசும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் நோய் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உச்சம் தொட்டது. நாள் ஒன்றுக்கு, பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியதால், மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது.ஆனால், கொரோனா கட்டுபாட்டு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் நவம்பர் மாதத்துக்குப் பின் படிப்படியாக குறையத் தொடங்கியது.

டிசம்பரில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து கீழ் குறைந்ததுடன்,ஜனவரி 16-ல் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதும் 500-க்குள் கீழ் குறைந்தது.ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை, அதை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர் என6 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்ட பின் கோயில் திருவிழாக்கள், திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி,சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு காரணமாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவது அதிகரித்துள்ளது.

மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணியாமல் மக்கள் கூடுவதால் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாக, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர்.

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர். மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அருண்குமார், பழனிவேல், தினேஷ்பாபு ஆகியோர், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதியோர் மிகவும் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாக கூறினார். தமிழகத்தில், கொரோனா தொற்று முழுமையாக ஒழியவில்லை எனவும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்

தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை தயார் நிலையில் இருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கட்டாயம் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே