கர்நாடகாவில் கரோனா 2-வது அலை; விதிகளை பின்பற்றாவிடில் மீண்டும் ஊரடங்கு அமல்: சுகாதார அமைச்சர் சுதாகர் எச்சரிக்கை

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டது, மக்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாவிடில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் எச்சரித்தார்.

இதுகுறித்து அமைச்சர் சுதாகர் நேற்று கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா பரவல் கடந்த ஒரு வாரத்தில் 400 மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் பெங்களூருவில் கரோனா தொற்றால்பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மூடப்பட்ட 3 கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நிலவரப்படி கர்நாடகாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிதாக ஒரு நாளில் மட்டும் 1,700 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்950 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மத நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க வேண்டும். கேரளா, மகாராஷ்டிர எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டுவருவோர் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும். திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என கரோனா தடுப்பு நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. பொதுமக்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாவிடில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே