உருவாகும் கரோனா 2-ம் அலை; உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் பலமுறை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

எனினும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடுமுழுவதும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கரோனா பெருமளவு கட்டுக்குள் வந்தது. தற்போது பல நாடுகளில் உள்ளது போலவே அடுத்த அலைகள் உருவாகும் சூழல் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 70 மாவட்டங்களில் கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை உருவாகும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த சமயத்திலேயே நாம் கரோனாவை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது மீ்ண்டும் நாடுதழுவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே