சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதத்தில் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாய் அளவில் இருந்த சமையல் எரிவாயு விலை 25 ரூபாய், 50 ரூபாய் என உயர்ந்து 825 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை மாதம் இன்று கேஸ் சிலிண்டரின் விலை 25.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டரின் விலை 850.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 809 ரூபாயிலிருந்து 835 ரூபாயாக உயர்கிறது. கொல்கத்தாவில் 835 ரூபாயிலிருந்து 860.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஒன்றரை மாதத்திற்குப் பிறகு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டருக்கான மானியமும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இதனால் சிலிண்டர் விலை ரூ. 875.50 சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக 50 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு சிலிண்டர் 925 ரூபாய் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 1 மாதமாக விலை மாற்றமின்றி விற்பனையாகிறது என்றாலும் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கோரிக்கையாகும்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ. 73.50 அதிகரித்தது. இதன் மூலம் ஒரு சிலிண்டர் விலை ரூ .1500 இல் இருந்து ரூ .1623 ஆக அதிகரித்தது. வணிக ரீதியான சிலிண்டர் விலை சென்னையில் ரூ .1623 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயுவின் விலை ரூ .73 அதிகரித்து ரூ .1623 ஆக உள்ளது. வணிக எரிவாயு சிலிண்டரின் விலை கொல்கத்தாவில் ரூ .72.50 அதிகரித்து ரூ .1629 ஆக உள்ளது, மும்பையில் ரூ .72.50 அதிகரித்து ரூ .1579.50 ஆக உள்ளது மற்றும் சென்னையில் சிலிண்டருக்கு ரூ .73.50 அதிகரித்து ரூ .1761 ஆக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே