கோச் இன்சமாமே பேட் செய்ய இறங்கினார், அந்த ஒரு பந்துதான் இன்று நான் இருக்கக் காரணம்: மனம் திறக்கும் ரஷீத் கான்

நான் ஜிம்பாப்வே சென்றேன், அடுத்த நாள் மேட்ச். நான் அணியில் ஆடுவேன் என்று ஆவலாக இருந்தேன். அப்போது இன்சமாம் தலைமையில் அணிக்கூட்டம் நடந்தது அப்போது நாளை ‘நீ ஆடவில்லை’ என்றார் இன்சமாம் என்னிடம், நான் ஓகே சார் என்றேன். நீ எப்படி வீசுகிறாய் என்று பார்த்து விட்டு முடிவெடுக்கிறேன் என்றார்

இன்று ரஷீத் கான் ஒரு சவாலான லெக் ஸ்பின்னராகத் திகழ்கிறார், ஆனால் இவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு தேர்வாவதில் பல தடுப்பணைகளைக் கடந்து கஷ்டப்பட்டுத்தான் வந்துள்ளார், அப்போதைய ஆப்கான் பயிற்சியாளரான முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இல்லையேல் தான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி இருந்திருக்க முடியாது என்று மனம் திறக்கிறார் ரஷீத் கான்.

அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் ஆப்கான் தேசிய அணிக்குத் தேர்வானது பற்றிய கதை ஒன்று உள்ளது. அப்போது நான் ஜிம்பாப்வே தொடரின் டி20 போட்டிகளுக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன், ஒருநாள் போட்டிகளில் அல்ல. ஆனால் ஒருநாள் அணிதான் முதலில் ஜிம்பாப்வே சென்றது.

அப்போது அணியின் பயிற்சியாளர் இன்சமாம் உல் ஹக் ‘ஏன் ஒரு லெக் ஸ்பின்னர் கூடவா ஒட்டுமொத்த ஆப்கானிலும் இல்லை?’ என்றார். அப்போது அவரிடம் ஒரு வீரர் இருக்கிறார், ஆனால் அவரை எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு லெக் ஸ்பின்னர் இருக்கிறார் என்று இன்சமாமிடம் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர் டி20 பவுலர், அவர் லெக்ஸ்பின்னராக இருந்தாலும் வேகமாக வீசுகிறார் ஒருநாள் போட்டிகளுக்கு லாயக்குப் படமாட்டார் என்று கூறியுள்ளார்.

ஆனால் இன்சமாம் பரவாயில்லை அவரை கூப்பிடுங்கள், சரியாக வந்தால் ஒருநாள் போட்டியில் களமிறக்குவோம் என்று கூறியுள்ளார். உடனே இரவு தொலைபேசி அழைப்பு வர நான் ஜிம்பாப்வேவுக்கு உற்சாகமாகக் கிளம்பினேன். நான் வெறும் டி20 பிளேயர் அல்ல ஆப்கான் அணியின் ஒருநாள் போட்டி பவுலரும்தான் என்று எனக்குள் பெருமையும் உற்சாகமும் பொங்கிற்று. இளம் வயதில் (17) தேசிய அணியில் இடம்பெறும் கனவில் இருந்தேன்.

நான் ஜிம்பாப்வே சென்றேன், அடுத்த நாள் மேட்ச். நான் அணியில் ஆடுவேன் என்று ஆவலாக இருந்தேன். அப்போது இன்சமாம் தலைமையில் அணிக்கூட்டம் நடந்தது அப்போது நாளை ‘நீ ஆடவில்லை’ என்றார் இன்சமாம் என்னிடம், நான் ஓகே சார் என்றேன். நீ எப்படி வீசுகிறாய் என்று பார்த்து விட்டு முடிவெடுக்கிறேன் என்றார்.

முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கான் அணி தோற்றது. அடுத்தநாள் பயிற்சியில் ஈடுபட்டோம். அப்போதுதான் இன்சமாம் சார் கால்காப்பை கட்டிக் கொண்டு அவரே இறங்கினார், இறங்கி என்னை வீசச் சொன்னார். அவர் கட் ஷாட்டில் எவ்வளவு பெரிய ஆள் என்பது அனைவருக்கும் தெரியும், முதல் 2 பந்துகளை அவர் கட் ஷாட் ஆடினார்.

எனவே நான் அதே இடத்தில் பிட்ச் செய்து லெக் ஸ்பின் செய்யாமல் கூக்ளி வீசலாம் என்று முடிவெடுத்தேன். பயிற்சி ஆட்ட பிட்ச் கடுமையாக பந்துகள் திரும்பும் வண்ணம் இருந்தன. ராங் ஒன் என்று கூறப்படும் அந்தவகை பந்தை வீசினேன், இன்சமாம் கால்காப்பைத் தாக்கியது பந்து. அவர் அதில் அவுட் இல்லை, ஆனால் அவரது மட்டையை பந்து கடந்து சென்றது.

அந்தப் பந்து என் வாழ்க்கையை மாற்றியது, இன்சமாம் உடனே நெட் முடிந்தவுடன் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது போட்டிக்குத் தயாராகு என்றார்.

அன்று முதல் அணி என்மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்ந்து அணியில் எடுத்து வருகிறது. இவ்வாறு கூறினார் ரஷீத் கான்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே