கொரோனா தொற்று அதிகமுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று ஆய்வை முடித்துக்கொண்டு கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர 50 கார் ஆம்புலனஸ் வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் மு.கஸ்டாலின், ‘PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.

முதல்வருடன் சுகாதார துறை அதிகாரிகளும் கவச உடை அணிந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்தரன், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, முதன்மை செயலாளர் உமாநாத், ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கவச உடையுடன் சென்று கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியதை பலர் பாராட்டி உள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளாார்.

அதில்,கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.

எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும் என்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே