குறுவை நெல் கொள்முதல் பணிகள் விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தற்போது தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு, இதுகுறித்த பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07/10/2021) ஆய்வு செய்தார். மேலும், டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தற்போதைய கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
குறுவை பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த 01/10/2021 முதல் 06/10/2021 வரையில் 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆங்காங்கே மழை பெய்துவருவதாலும், கொள்முதல் பணிகள் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இப்பணிகளை மேற்பார்வையிடுவதற்காக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரை முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.