முதல்வர் அனைவருக்கும் அல்வா தான் கொடுத்தார் – ஸ்டாலின் விமர்சனம்..!!

முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், காணை குப்பம் கிராமத்தில் இன்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், வானூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் குறைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

“ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை மனுக்களை அளித்தவர்கள் அதற்குரிய ஒப்புகை சீட்டை பெற்றுக்கொள்ளவும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஒப்புகை சீட்டுடன் கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம்.

எந்த தொகுதிக்கு பயணம் மேற்கொண்டாலும் தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இல்லை என்பதையே உணர முடிகின்றது.

ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால், மக்களின் அன்றாட பிரச்சினைகளை தமிழக அரசு தீர்த்து வைத்திருக்கும்.

மக்கள் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுவதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை வைப்பதை பார்த்து முதல்வர் மிரண்டு போயிருக்கிறார்.

குறைந்தபட்ச வேளாண் திட்டத்தைக் கொண்டுவந்து, அதற்காக விவசாயிகள் செல்போன் மூலம் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தார்.

அதனால் ஸ்டாலினுக்கு வேலையில்லை என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமிக்கு இந்த எண்ணம் தோன்றவில்லை, இந்த ஸ்டாலின் கூறிய பிறகு தான் ஆட்சி முடியும் நேரத்தில் புத்தி வருகிறதா? யார் முதல்வர் பழனிசாமியா? இந்த ஸ்டாலினா?

2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ‘அனைவருக்கும் செல்போன் கொடுப்போம்’ என கூறியது.

ஆனால், முதல்வர் அனைவருக்கும் அல்வா தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஸ்டாலினால் குறைகளை கூற முடியாது என்கிறார் முதல்வர். மக்கள் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே போதும், இந்த ஆட்சியின் குறைகளை கண்டுபிடித்து விடலாம்.

காரணம், விழுப்புரத்தில் தடுப்பணை இடிந்து விழும் சப்தம், தாராபுரம் பாலம் விரிசல் விழும் சத்தம் கேட்கும். கரூரில் மினி கிளினிக் விழும் சப்தம் கேட்கும், நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி இடிந்து விழுந்த சப்தம் என கேட்கும். இப்படி இடிந்து விழும் சப்தம் கேட்டலே அது பழனிசாமி அரசு தான் என புரிந்துகொள்ளமுடியும்.

பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணமாக தென்பெண்ணை ஆற்றில் இடிந்து விழுந்த தடுப்பணையே போதும். ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அணை, ஒரு‌ மாதத்தில் இடிந்து விழுந்ததும், அது அணை அல்ல வெறும் சுவர் தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் மாற்றி பேசி வருகிறார். காலையில் அணை என்றும், மாலையில் சுவர் என்றும் சொல்வார்.

மேலும், அவர் திறந்துவைத்த அணையையே இன்னமும் அணை திறக்கப்படவே இல்லை என்கிறார். 20.12. 2020-ம் தேதி இந்த அணையை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்துள்ளார்.

‘கிணற்றைக் காணவில்லை’ என்று வடிவேலு பேசியது போல அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருகிறார்.

ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்த விவகாரத்தில், அதிகாரிகளை கைது செய்த அரசு ஏன் தடுப்பணையை கட்டிய ஒப்பந்ததாரரை கைது செய்யவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை கையில் வைத்திருக்கும் பழனிசாமி இதற்கு பதில் சொல்வாரா?

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வகிக்கின்ற பதவிக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும். சி.வி.சண்முகம் என்னை ஒருமையில் பேசுகிறார், அதனால் எனது தகுதி குறைந்துவிடப் போவதில்லை. சி.வி.சண்முகத்திடம் ‘மைக்’ நீட்டுவது பேசுவதற்கே தவிர வாந்தி எடுப்பதற்காக அல்ல.

திமுகவுக்கு மானமில்லையா என்கிறார். உங்களை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் வீட்டில் தலைவாழை இலை போட்டு சாப்பிட்டீர்களே? உங்களுக்கு மானம் உள்ளதா? ‘அம்மா, அம்மா’ என்று சொன்ன சி.வி.சண்முகத்திடம் நான் கேட்கிறேன், அந்த அம்மா மரணத்தில் இருக்கக்கூடிய மர்மத்தை கண்டுபிடிக்க மேல் முயற்சியில் ஈடுபட்டீர்களா?

2012 ஆம் ஆண்டு சண்முகத்திடம் இருந்து அமைச்சர் பதவியையும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறித்தார்.

இதை எதற்காக அவர் பறித்தார் என்ற காரணத்தை சண்முகம் சொல்வாரா? கருணை அடிப்படையில் மாவட்ட ‘கோட்டா’வில் அமைச்சரானவர் சி.வி.சண்முகம். முதல்வர் உதவாக்கரை, மந்திரிகள் உளறுவாயர்கள்.

தனது பதவியைp பயன்படுத்தி இந்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு சண்முகம் என்ன செய்தார் என்று விளக்க முடியுமா? ஊருக்கு சவால் விடுவது இருக்கட்டும். சொந்த ஊருக்கு சண்முகம் என்ன செய்தார் என்று சொல்ல வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் பல திட்டங்களை நிறைவேற்றாமல் இருக்கிறது இந்த அதிமுக அரசு.

முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது. இவர்களிடமிருந்து மீட்க உள்ளதுதான் இந்த தேர்தல்”.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே