5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை, திருச்சி மாவட்டம் கோல்டன் பாறைப் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், கருவூர் மயிலம் பட்டியில் 10 சென்டி மீட்டர் மழையும், திருச்சி லால்குடியில் 8 சென்டி மீட்டர் மழையும், பெரம்பலூர் மாவட்டம் எறையூர் மற்றும் காஞ்சிபுரத்தில் 6 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கெட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் ஆற்காடு, பெரம்பலூர் மாவட்டம் லுப்பைக்குடிகாடு மற்றும் விருதுநகரில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

லட்சத்தீவு பகுதிகள், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிரா பகுதிகள், மத்திய கிழக்கு வங்க கடல் வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், கடலோர குஜராத் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே