சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் கூறும்போது, ‘தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ்.

இரவு கடையை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் இருவர்மீதும் வழக்குப்போட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இருவரும் கோவில்ப்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்கள்.

இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. அரசுதரப்பில், இந்த வழக்கு குறித்து, சிபிஐ விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மதுரை கிளையில் விசாரணைக்கு வரும்போது இதை தெரிவித்து நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐயிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதால் அவர்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், 2 எஸ்.ஐக்கள், 2 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்துவருகிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட வடமாநில அரசியல்வாதிகள் திரையுலக, கிரிக்கெட் பிரபலங்கள் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது சிபிஐக்கு வழக்கை மாற்ற அனுமதி பெறப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே