#BREAKING : நான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், ஜே.பி.நட்டாவை சந்தித்ததற்காக முடிந்தால் என் மீது திமுக நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏவும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் கு.க.செல்வம்.

சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மாவட்ட செயலாளர் பொறுப்பை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது.

இந்நிலையில் கட்சியின் சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார். 

இதன் காரணமாக மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏ கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை முதலே எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜே.பி நட்டாவுடன் சந்திப்பு:

இதனை தொடர்ந்து, டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்திற்கு சென்ற திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழக பாஜக தலைவர் முருகனும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், தமிழ்க் கடவுள் முருகனை விமர்சித்தவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என கூறினார்.

திமுக உட்கட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்த வேண்டும் எனவும் இந்தியாவில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு எல்லா விதத்திலும் இடையூறாக இருக்கும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்ந்த அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டுமென ஸ்டாலினிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொள்ளும் பிரதமருக்கு நன்றி தெரிவித்த கு.க.செல்வம் ராமேஸ்வரத்தையும் அயோத்திக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என கோரினார்.

பாஜகவில் இணையவில்லை:

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணையவில்லை என மறுத்தார்.

தனது தொகுதியில் 2 மின்தூக்கிகளை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசவே வந்ததாக குறிப்பிட்டார்..

திமுக தலைமைக்கு தகவல் கூறாமல் வந்ததாக செல்வம் தெரிவித்தபோது இதற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு முடிந்தால் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும் என கூறினார்.

முன்னதாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

DMK | BJP

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே