இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், பாரம்பரிய சிகரெட் மற்றும் பீடிக்கும் தடை விதிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 2 தொண்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
புகையிலையால் தயாரிக்கப்படும் சிகரெட் உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இ-சிகரெட் பயன்பாட்டுக்கு வந்தது. இதிலும் நிகோடின் திரவம் பயன்படுத்தப்படுவதால் உடல்நலன் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனால், இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கடந்த செப்டம்பர் 18-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, மின்னணு சிகரெட் தடை மசோதா கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விளம்பரம், பயன்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த யுனைடெட் ரெசிடென்ட்ஸ் ஜாயின்ட் ஆக்ஷன் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த விசேஞ்ச்யு என்ற தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன.
இ-சிகரெட்டைப் போல பாரம்பரிய சிகரெட், பீடி மற்றும் புற்று நோயை உண்டாக்கக் கூடிய இதர புகையிலை பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்த உள்ளனர். இது தொடர்பாக மூத்தவழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை அணுகி ஆலோசித்து வருகின்றனர்.
News Source : PTI