கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய, என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் போலிச் சான்றிதழ் மூலம் கேரள அரசு வேலையில் சேர்ந்ததாகப் புகார் எழுந்தது குறித்து விசாரணை செய்யப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்தத் தூதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலைக் கடந்த மாதம் 30-ம் தேதி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து சோதனையிட்டனர்.
அதில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடத்தல் விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைச் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக இருந்துவரும் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தங்கக் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
ஸ்வப்னா சுரேஷ் என்ஐஏ அமைப்பால் கடந்த சில நாட்களாக தேடி வந்த நிலையில், நேற்று பெங்களூருவில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பாசில் பரீத் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.
இந்தச் சூழலில் கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிக்குச் சேர்வதற்காக ஸ்வப்னா சுரேஷ் அளித்த பட்டப்படிப்புச் சான்றிதழ் போலியானது என்ற புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷைப் பரிந்துரை செய்த மனிதவள நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹூப்பர்ஸ் (பிடபிள்யுசி) நிறுவனத்திடம் கேரள தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புத் துறை விளக்கம் கேட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் படிப்பு முடித்ததாக ஸ்வப்னா சுரேஷ் சான்று அளித்திருந்தார்.
இது தொடர்பாக கேரள தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் சான்றிதழில் குறிப்பிட்ட ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை, சான்று பெறவில்லை.
அது போலியானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் போலிச் சான்று அளித்து கேரள அரசுப் பணியில் சேர்ந்தது குறித்து விசாரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘போலிச் சான்று அளித்து கேரள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிக்குச் சேர்ந்ததாக ஸ்வப்னா சுரேஷ் மீது புகார் எழுந்துள்ளது.
அதுகுறித்து கேரள போலீஸார் விசாரணை நடத்துவார்கள்.
இந்தப் புகாரில் சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை வழக்கம்போல் செய்வார்கள்.
அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.