‘அண்ணாத்த’ அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு ஒப்பந்தம்

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தம், படப்பிடிப்பில் கரோனா பரவலால் நிறுத்தம், ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் நிறுத்தம் எனப் பல்வேறு கட்டத் தடங்கல்களுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் ஜெகபதி பாபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் ஜெகபதி பாபு. ஆகையால், ‘அண்ணாத்த’ படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் வில்லனாகவும் ஜெகபதி பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், பொள்ளாச்சியில் சில காட்சிகளைப் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடிந்து, ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே