நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் புரியவில்லை : உதயநிதி ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் புரியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக திமுக இளைஞர் அணியினர் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி நுழைவாயில் முன்பு கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமையை சட்ட திருத்தத்திற்கு எதிராக கையெழுத்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்திய பாஜக அரசும் அதனுடைய அடிமை அரசாக இருக்கக்கூடிய தமிழக அரசும் ஆதரித்து கொண்டு வந்திருக்கின்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தி.மு.க கூட்டணியின் சார்பாக ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு, அதை குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.

அதற்கு பொதுமக்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக வந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் இன்று நான் படித்துள்ள லயோலா கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு சந்தித்தேன்.

கையெழுத்து போட வேண்டி மாணவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

அவர்களாக நேரடியாக வந்து தன்னெழுச்சியாக தங்களது கையெழுத்தை இட்டு CAA-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் தி.மு.க தலைவர் சொன்னது போல ஒரு நடிகர் மட்டும்தான். முதலில் அவர் அரசியல் கட்சி தொடங்கட்டும். அவர்களது கொள்கையை சொல்லட்டும். அதன் பின்பு அவர் கூறும் கருத்துகளுக்கு பதில் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், ரஜினிகாந்த் நடிகராக மட்டுமே இருப்பதால் அவருக்கு அரசியல் இன்னும் புரியவில்லை.

முதலில் அரசியல் கட்சியை தொடங்கட்டும்; அதன் பின்பு அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்ப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே