#அனுபவமே_பாடம் : ராகவேந்திரா மண்டப சொத்து வரியை கட்டினார் நடிகர் ரஜினிகாந்த்..!

ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரி விவகாரத்தில் சிக்கிய நடிகர் ரஜினிகாந்த் ரூ.6.5 லட்சம் வரிப்பணத்தை செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் -முதல் செப்டம்பர் வரை திருமண மண்டபம் மூடப்பட்டு இருந்தது.

அதனால் சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மாநகராட்சியின் விளக்கத்திற்கு காத்திருக்காமல் வழக்கு தொடர்ந்தது ஏன்? இதுபோன்று நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். 

இதனால் ரஜினி தரப்பில் வழக்கு திரும்பப்பெறப்பட்டது.

இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கு மாநகராட்சி விதித்த சொத்துவரியை நடிகர் ரஜினிகாந்த் தற்போது செலுத்தியுள்ளார்.

சொத்துவரி ரூ .6.50 லட்சத்தை மாநகராட்சி ஸ் அலுவலகத்தில் ரஜினி சார்பில் காசோலையாக செலுத்தப்பட்டது.

சொத்து வரி செலுத்த மாநகராட்சி விதித்த கெடு இன்றுடன் முடிவடைவதால் ரஜினி அவசர அவசரமாக வரிப்பணத்தை செலுத்தியுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், சென்னை மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டு #அனுபவமே_பாடம் என்ற ஹேஷ்டாக்கையும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே