தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் வடபழனி கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை எதிர்க்கட்சிகள் வாய்பிளக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பெண்களுக்கு பேருந்தில் இலவசம், கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு ஆகிய அதிரடி அறிவிப்புகளில் தொடங்கி தமிழக வளர்ச்சிக்கான குழு அமைப்பு வரை, அவர் செய்யும் அனைத்து செயல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் 33 அமைச்சர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் முழு கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 30 நாட்களுக்குள் ஒரு அரசு இத்தனை காரியங்களை செய்ய முடியுமா? என வியந்து பார்க்கும் வகையில் இருக்கிறது திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள். இந்த நிலையில், சென்னையில் வடபழனி கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது.

சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வளாகங்கள், கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது. மீட்கப்பட்ட கோவில் நிலங்களை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக அரசு 30 நாட்கள் நிறைவு செய்துள்ளது. ட்ரெய்லர் தான் இது. இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள். யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அதிரடியாக பேசினார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும். எந்தெந்த கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை என்பது கண்டறியப்படும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே