தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.
அதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், “மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்முடன் பயணிக்கவுள்ளார்.
அவர், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இந்தக் குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
அதோடு, “ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்படுகிறார்” என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

