புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்..!!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின.

இதையடுத்து பெரும்பான்மையை நிரூ பிக்கும்படி நாராயணசாமி அரசுக்கு பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த திங்கள்கிழமை பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார்.

அப்போது, அவர் மத்திய அரசு மற்றும் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாக விமர்ச்சித்தார். பின்னர் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.

இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறவில்லை என பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் அரசு கவிழ்ந்தது.

பின்னர் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.

இதனையடுத்து, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இறுதிக்கட்டத்தில் புதுச்சேரி அரசியலில் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியிருக்கிறது.

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்த நிலையில் ஆட்சியமைக்க வேறு கட்சிகள் உரிமை கோராததால் குடியரசு தலைவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே