சாலையில் குப்பை போட்டால்.. வீட்டு வாசலில் பதிலுக்கு குப்பைகளை கொட்டி நகராட்சி நிர்வாகம் அதிரடி..!!

சாலையை மாசுபடுத்தும் வகையில், குப்பைகளை கொட்டும் மக்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா நகராட்சி நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

காக்கிநாடாவில் குப்பைகளை பொறுப்பற்ற முறையில் சாலையில் தூக்கி எறியக் கூடாது என நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது.

தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்க செல்கின்றனர். ஆனால் இவை அனைத்தையும் மீறி, சிலர் சாலைகளில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவது தொடர்கதையாகி வந்தது.

இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்வப்னில் தினகர் ஒரு அதிரடி முடிவெடுத்தார். குப்பைகளை சாலைகளிலேயே தூக்கி எறிபவர்களை கண்டறிந்து, குப்பைகளை சேகரித்து அவர்களது வீட்டு வாசலுக்கே சென்று கொட்டுமாறு உத்தரவிட்டார். 

மக்கள் இதனை மாற்றும் வரை தொடர்ந்து குப்பைகளை கொட்டுமாறு அவர் நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் ஸ்வப்னில் தினகர் கூறுகையில், ‘தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் சிலர் அதனை பின்பற்றுவதில்லை.

அவர்கள் செய்வது தவறானது என்பதை புரிய வைப்பதற்காகதான் இதனை செய்கிறோம். இதன்மூலம் அவர்கள் இனி அப்படி செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே