பாஜகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்குமாறு காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ள சோனியா காந்தி, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய சிலரின் பின்னணியில் பாஜக தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 23 பேர், உறுதியற்ற தலைமை காரணமாக கட்சி அல்லாடுவதாகவும், இதனால் கட்சித் தொண்டர்கள் மனஉறுதி குலைந்து, கட்சியை பலவீனமடையச் செய்வதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத், பிரிதிவிராஜ் சவான், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருந்த அந்த கடிதத்தில், கட்சிக்கு முழுநேர மற்றும் வெளிப்படையான தலைமையும், கூட்டு முடிவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைமை குறித்தும், நேரு குடும்பத்தை சாராத ஒருவர் அக்கட்சிக்கு தலைமை தாங்குவது குறித்தும் விவாதங்கள் எழுந்தன.

சோனியா, ராகுல் தலைமைக்கு ஆதரவாக, தற்போதைய முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் குரல்கொடுத்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவான காரியக் கமிட்டிக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஏ.கே.ஆன்டனி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை வெளியே கசியவிட்டதற்காக அப்போது கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்தார்.

சோனியா காந்தியின் பதில் கடிதத்தையும் கே.சி.வேணுகோபால் படித்துக் காண்பித்தார். கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்குமாறும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்பாடுகளை தொடங்குமாறும் சோனியா காந்தி அதில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதே கருத்தை மீண்டும் வலியுறுத்திய சோனியா காந்தி, நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்குமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மன்மோகன் சிங், ஏ.கே.ஆன்டனி உள்ளிட்டோர் சோனியா காந்தி தலைவராக தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், ராகுல்காந்தி தலைமைப் பொறுப்பேற்க வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி உடல்நலம் குன்றியிருக்குபோது கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, கடிதம் எழுதிய சிலரின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் குற்றம்சாட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

சோனியா காந்தி தலைமைப் பதவியில் தொடர விருப்பம் இல்லாத நிலையில், அந்த பொறுப்பை ஏற்க ராகுல் காந்தியோ பிரியங்கா காந்தியோ தயாராக இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட உள்ளது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே