நடிகை மீராமிதுன் அண்மை காலமாக முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதிலும் சூர்யா, விஜய், த்ரிஷா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது.
அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார். மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் நடிகர் விஜய் செய்து வருகிறார்.
மீராமிதுனின் நடவடிக்கைக்கு நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பு அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், “மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா.
வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை… தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன்.
நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்… ??! நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது.
ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.