யானை தந்தங்களை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த வழக்கில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு, எதிராக கேரள வனத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் தேவாரமில் உள்ள மோகன்லாலின் வீட்டில் 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது நான்கு யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக மோகன்லால் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் இன் தலையீட்டால் மோகன்லால் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
மேலும் தந்தங்களை மோகன்லாலே வைத்து கொள்ள அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. தந்தங்களை வைத்துக் கொள்வதற்கான அனுமதி சான்றினை முதன்மை வனப்பாதுகாவலர் வழங்கினார்.
பிரச்சனை ஓய்ந்ததாக கருதப்பட்ட நிலையில், இது தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வன உயிர் பாதுகாப்பு சட்டம் 39 பிரிவு 3ன் கீழ் தந்தங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதை உயர் நீதிமன்றம் விசாரித்து தொடங்கியவுடன், மோகன்லாலுக்கு எதிரான வழக்கை மீண்டும் அம்மாநில வனத்துறை தூசு தட்டி எடுத்தது. பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. அதில் மோகன்லாலின் பெயர் முக்கியமாக சேர்க்கப்பட்டுள்ளது.