ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் பலி..??

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சரியாக ஆக்சிஜன் கிடைக்காமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் 5 பேர் அடுத்தடுத்து பலியானதாக கூறப்படுகிறது.

டேங்கரில் இருந்து ஆக்சிஜனை நோயாளிகளுக்கு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஆக்சிஜன் வினியோகத்தில் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும், நீண்ட நேரம் ஆக்சிஜன் வழங்காமல் தாமதப்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 3 பேரை அவர்களது உறவினர்கள் தனியார் ஆம்புலன்சில் ஏற்றி அழைத்துச் சென்று விட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், உயிரிழந்த 5 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பே கிடையாது என்றார்.

மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும், நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக வெளியான தகவலும் தவறானது என்றும் கூறினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே