கொரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கையாக மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளின் சிகிச்சைக்காக பிரேத்யேக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலை தற்போது சற்றே குறைந்துள்ள நிலையில் மூன்றாவது அலை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கான பிரத்யேக வார்டு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று குழந்தைகளுக்கான ஜீரோ டிலே வார்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறி இருக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 11 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு பிரிவில் தற்போது இரு குழந்தைகள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
தேவைப்பட்டால் படுக்கை வசதி அதிகரிக்கப்படும் என அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3ஆவது அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.