3-0 ‘கிளீன் ஸ்வீப்’ செய்த மே.இ.தீவுகள்: உலகக்கோப்பை சூப்பர் லீகில் கடைசி இடத்தில் இலங்கை

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் பொலார்ட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் சேர்க்க, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 276/5 என்று வெற்றி பெற்றது.

நார்த் சவுண்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை மே.இ.தீவுகள் வீழ்த்தி 3-0 என்று ஒருநாள் தொடரை கிளீன் ஸ்வீப் செய்தது மே.இ.தீவுகள்.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் பொலார்ட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் சேர்க்க, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 276/5 என்று வெற்றி பெற்றது.

இதன் மூலம் உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள் பட்டியலில் எந்த ஒரு புள்ளியையும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது இலங்கை.

தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்டிங் இலங்கைக்கு சொதப்ப கீழ் வரிசை வீரர்கள் ஒப்பேற்றுவது மே.இ.தீவுகளின் பிக் ஹிட்டர்களுக்கு எதிராக போதமானதாக இல்லை என்பது 3வது ஒருநாள் போட்டியிலும் தெரிந்தது. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 6 போட்டிகளைத் தோற்றுள்ளது இலங்கை.

மே.இ.தீவுகளின் அதிரடி வீரர்களான எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோரை அதிக நேரம் நிற்க விடாவிட்டாலும் ஷேய் ஹோப் தனது 6வது ஒருநாள் தொடர் அரைசதத்தை எடுத்தார். இவ்வாறு தொடர்ச்சியாக 6 அரைசதங்கள் எடுக்கும் 10வது வீரர் ஆனார் ஹோப். பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டட்தான் தொடர்ந்து 9 அரைசதங்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

நேற்று ஹோப், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 109 ரன்களைச் சேர்த்தனர். பிராவோ 132 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து தன் 4வது ஒருநாள் சதத்தை எடுத்தார். 2016-க்குப் பிறகு முதல் சதம். ஷேய் ஹோப் 72 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 64 ரன்களில் வெளியேறினார். பூரனும் உடனடியாக 2 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 15 ரன்களுக்கு வெளியேறினார்.

கேப்டன் கிரன் பொலார்ட், டேரன் பிராவோவுடன் இணைந்தார். இருவரும் இணைந்து 71 பந்துகளில் 80 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். பிராவோ திமுத் கருணரத்னேவின் அற்புதமான டைவிங் கேட்சுக்கு வெளியேற 23 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்று இருந்தது. ஜேசன் ஹோல்டர் 1 நான்கு ஒரு சிக்ஸுடன் 14 நாட் அவுட், பொலார்ட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 53 ரன்கள் என்று நாட் அவுட்டாக அணியை 49வது ஓவரில் வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

முன்னதாக இலங்கை அணியில் ஹசரங்கா, அஷன் பந்தேரா ஆகியோர் அடித்து ஆடவில்லை எனில் மிக மோசமாகப் போயிருந்திருக்கும். 7வது விக்கெட்டுக்காக இருவரும் 123 ரன்கள் அதிரடிக் கூட்டணி அமைத்தனர். இலங்கை அணியை சரிவுக்கு ஆளாக்கியவர் மே.இ.தீவுகளின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹுசேன் இவர் 10 ஓவர் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நிசாங்கா, சந்திமால், ஷனகா ஆகியோர் சடுதியில் பெவிலியன் திரும்பினர்.

இலங்கை அணி நன்றாகத் தொடங்கியது. குணதிலகா 36 ரன்களிலும் கேப்டன் திமுத் 31 ரன்களிலும் பிரிந்தனர். 143/5 என்ற நிலையிலிருந்து ஹசரங்கா டிசில்வா 60 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 80 ரன்கள் விளாச அஷன் பந்தேரா 74 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து இருவரும் நாட் அவுட்டாகத் திகழ ஸ்கோர் 274/6 என்று வந்தது, ஆனாலும் மே.இ.தீவுகளின் காட்டடி வீரர்களிடம் இந்த ஸ்கோர் போதாமல் போனது.

ஆட்ட நாயகனாக சதமெடுத்த டேரன் பிராவோவும், தொடர் நாயகனாக ஷேய் ஹோப்பும் தேர்வு செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே