கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்..!!

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த பிறகு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

நேற்று வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்து கொண்டிருந்தனர். 5 பணியாளர்கள், இரண்டு விமானிகள் என மொத்தம் 191 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று இரவு கோழிக்கோடில் கனமழை பெய்தது. விமானத்தை இரவு 7.40 மணியளவில் தரையிரக்க விமானிகள் முயற்சித்தனர். ஆனால் மழை காரணமாக தரையிறக்குவதில் இரு முறை சிக்கல் ஏற்பட்டது.

அதன்பின் மூன்றாவது முறை 10ஆவது ஓடு தளத்தில் தரையிறக்க முயன்றபோது விமானம் சருக்கிச் சென்றுள்ளது. மேலும், ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர், விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறியுள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே