வெங்காயம் விலை குறையுமா?

நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், கிழக்கு மாவட்டங்கள் மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவை தான் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

மேற்கண்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கன மழையால் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள லாசல்கான் சந்தைதான் நாட்டின் மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தை ஆகும்.

இந்த சந்தையில் கடந்த வாரம் 33 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை வார இறுதியில் 45 ரூபாயாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிந்தைய புதிய உச்சமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சில்லரை விலையில் ஒரு கிலோ வெங்காயம் டெல்லியில் 65 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 56 ரூபாயாகவும், மும்பை மற்றும் பெங்களூருவில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 வரை விற்பனையாகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் விலை உயர்வை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக தமது இருப்பில் உள்ள 56,000 டன்னை மாநிலங்கள் தங்களது தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசுயின் இந்த அறிவிப்புக்கு டெல்லி, திரிபுரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மத்திய அரசுயின் இருப்பில் இருந்து

இதுவரை 16 ஆயிரம் டன் வெங்காயம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த வாரம் வெங்காயம் விலை உயர்ந்த போதே மத்திய அரசு வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்தது.

அதோடு 2,000 டன் வரை வெங்காயம் இறக்குமதிக்கு வரி ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும் வெங்காயத்தின் விலை உயர்வு கட்டுப்படாத நிலையில் அடுத்த சில நாட்களில் வெங்காயத்தை வியாபாரிகள் இருப்பு வைக்க உச்ச வரம்பை நிர்ணயிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே