நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தையில் வாழைத்தார்கள் விலை அதிகரித்து கூடுதல் லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் சந்தையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பூவன்பழம் அதிகபட்சமாக ரூபாய் 700 க்கும், ரஸ்தாளி ரூபாய் 600 க்கும், பச்சை நாடன் ரூபாய் 500 க்கும், கற்புரவள்ளி ரூபாய் 400க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூபாய் 8க்கும் விற்பனையானது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினங்கள் வருவதால் விலை அதிகரித்து இருப்பதாகவும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது வாழைத்தார் ஒன்றுக்கு 300 ரூபாய் கூடுதலாக லாபம் கிடைத்துள்ளதாகவும், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.