அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் கொலை வழக்கு விசாரணையை, 3 மாதத்தில் நிறைவு செய்ய கீழமை நீதிமன்றத்திற்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த தனது சகோதரர் மீனாட்சி சுந்தரம், 2014 மே 13ஆம் தேதி கொலை செய்யப்பட்டதாக, ராஜபாளையத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்தக் கொலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு இருப்பது செல்போன் ஒலிப்பதிவு மூலம் தனக்கு தெரிய வந்ததாகவும், இதுதொடர்பான மனுவை ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்த வழக்கில், கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் நிறைவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்ததையும் மனுவில் சிவசுப்ரமணியன் சுட்டிக் காட்டி இருந்தார்.
கொலை வழக்கானது, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் சங்க செயலரும், ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவருமான முத்துப்பாண்டியன் என்பவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவருக்குப் பதில் வேறு ஒருவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக யூகத்தின் அடிப்படையில், முத்துப்பாண்டியனை மாற்றக் கோருவது ஏற்கத்தக்கதல்ல எனத் தெரிவித்தனர்.
கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞருக்கு உதவுவதற்காக மனுதாரர் தரப்பில் ஒரு வழக்கறிஞரை நியமிக்கலாம் என அறிவுறுத்தினர்.
மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டலின் படி, மனுதாரர் தரப்பு தகவல்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கறிஞரின் கடமை என்றும் நீதிபதிகள் கூறினர்.
வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற வழிகாட்டல் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை கீழ் நீதிமன்றம் 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.