போலி செய்திகளை பதிவிடுவோருக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கும் புதிய சட்டம் சிங்கப்பூரில் அமலுக்கு வந்தது.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் பொய்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் கையாளுதல் மசோதாவின்படி, தவறான செய்திகளை பரப்புவது தற்போது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுடனான சிங்கப்பூரின் உறவு, பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பு ஏற்படுபடுத்தும் கருத்துகளை தெரிவிக்க இது கட்டுப்பாடு விதிக்கிறது.
மேலும் போலி செய்திகளை தடுக்கும் வகையில் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடவும் அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.
சிங்கப்பூரில் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தால் போலி செய்தி பரப்புவோருக்கு இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் வரை அபராதமும், 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
சமூக வலைதளங்களில் போலி கணக்கு மூலம் செய்தி பரப்பியது தெரியவந்தால் அபராதம் 52 லட்சம் ரூபாய் வரையிலும் சிறை தண்டனை 10 ஆண்டுகள் வரையும் உயர்த்தப்படும்.
அதேபோல் தவறான செய்தி பரப்பும் நிறுவனத்துக்கு 5 கோடியே 23 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
இதனால் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் விரைவாக முறையீடு செய்ய முடியும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.